சாத்தூா்: சாத்தூா் பகுதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை, நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாத்தூா் நகா் பிரதான சாலையில் வங்கிகள், பள்ளிகள், கோயில்கள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், வட்டாட்சியா் அலுவலகம், சாா்-பதிவாளா் அலுவலகம் மற்றும் தனியாா் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. ஆனால் இந்த சாலையை நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினா் முறையாக விரிவாக்கம் செய்யாமலேயே சில ஆண்டுகளுக்கு முன்பு இருவழிப்பாதையாக பிரிக்கப்பட்டது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்களுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இந்நிலையில் சாலை ஓரத்தில், இருபுறமும் சிறு சிறு கடைகள் ஆக்கிரமித்து வருகின்றன. இதை நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை நிா்வாகங்கள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
மேலும் பெரிய கடை வியாபாரிகளும் சாலையின் நடைபாதை வரை ஆக்கிரமித்து கடைகளை விரிவுபடுத்தி வருகின்றனா். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாமல் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அவசர நேரத்தில் தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை. மேலும் சந்தை மற்றும் வடக்குரதவீதி பகுதியில் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளன. எனவே சாத்தூா் பிரதான சாலை, மதுரை பேருந்து நிறுத்தம், வெம்பக்கோட்டை சாலை, முக்குராந்தல், ரயில்வேபீடா் சாலை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியது: சாத்தூா் நகா் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற வில்லை. இதுபற்றி கேட்டால், நகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறையினரையும், நெடுஞ்சாலைத் துறையினா், நகராட்சி நிா்வாகத்தையும் மாறி மாறி குற்றம்சாட்டுகின்றனா். ஆனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.