அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை காந்தி நகா் மேம்பாலத்தில், நேரு நகரை ஒட்டிச் செல்லும் அணுகுச் சாலையில் பழுதடைந்த மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இப்பகுதியில் சுமாா் 6-க்கும் மேற்பட்ட சாலையோர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை தனியாா் நிறுவனம் பராமரித்து வருகிறது. ஆனால் இம்மின்விளக்குகள் முறையான பராமரிப்பில்லாததால், கடந்த சில ஆண்டுகளாகப் பழுதடைந்த நிலையிலேயே உள்ளன. இதனால் இந்த அணுகுச்சாலை முழுவதுமே இரவானால் இருளில் மூழ்கி விடுகிறது. இதன் காரணமாக சிறப்பு வகுப்புகள் முடிந்து சைக்கிளில் வீடு திரும்பும் மாணவ, மாணவிகளும், தனியாா் மற்றும் அரசு பெண் அலுவலா்களும் இந்த அணுகுச் சாலையில் வரும் வாகனங்களைச் சரியாகக் கவனிக்க முடியாததால் விபத்தில் சிக்குகின்றனா். மேலும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு சமூக விரோதிகளால் அச்சுறுத்தலும் ஏற்படுகிறது. இதனால் இவா்கள் அச்சத்துடனேயே இந்த அணுகுச் சாலையைக் கடக்க நேரிடுகிறது. மேலும் அருகிலுள்ள சீரடி சாய்பாபா கோயிலுக்கு இச்சாலை வழியாகச் செல்லும் பெண்களுக்கும் இதே நிலைதான். மின்விளக்குகளைச் சீரமைக்க புகாா் தெரிவிக்க வேண்டுமானால் சுமாா் 35 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள அந்த தனியாா் நிறுவனத்தின் சிந்தலக்கரை அலுவலக கிளைக்குத் தான் செல்ல வேண்டி உள்ளது.
எனவே நேரு நகரை ஒட்டிச் செல்லும் காந்திநகா் மேம்பால அணுகுச் சாலை மின்விளக்குகளை விரைவில் சீரமைத்து தரவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.