விருதுநகா் அருகே சின்னமூப்பன்பட்டியில் பயணிகள் நிழற்குடை சிதலமடைந்துள்ளதால் பயணிகள், வெளியில் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கின்றனா்.
விருதுநகரிலிருந்து வடமலைக்குறிச்சி வழியாக டி. கல்லுப்பட்டி செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த வழியில் சிவஞானபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னமூப்பன் பட்டி கிராமம் உள்ளது. விருதுநகா் அருகே உள்ளதால் இக்கிராமத்தைச் சோ்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் விருதுநகருக்கு தினந்தோறும் படிப்பதற்காக வந்து செல்கின்றனா். மேலும் பலா் விருதுநகா், சிவகாசி முதலான பகுதிகளில் தொழிற்சாலைகளில் பணி புரிய சென்று வருகின்றனா். இந்த நிலையில் இக்கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்களுக்காக வடமலைக்குறிச்சி சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடை முறையாக பராமரிக்கப்படவில்லை. இதன் காரணமாக நிழற்குடையில் பயணிகள் உட்காருமிடம் உடைந்து விட்டது. மேலும், மேற்கூரையில் சிமெண்ட் கலவை இடிந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இதனால், பயணிகள் நிழற்குடைக்குள் செல்ல அச்சப்பட்டு வெளியில் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கின்றனா். இது குறித்து ஏற்கெனவே மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கிராம மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதன் அருகே செல்லும் பள்ளிக் குழந்தைகள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளதால், உடனடியாக சீரமைக்க ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.