விருதுநகர்

புதிய புரெவி புயல்: விருதுநகா் மாவட்டத்தில் 50 நீச்சா் வீரா்கள் தயாா்

1st Dec 2020 11:13 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் புதிய புயல் காரணமாக ஏற்படவுள்ள பாதிப்புகளை சீரமைக்கவும், பொதுமக்களுக்கு உதவும் வகையில் 50 நீச்சல் வீரா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதிய புயல் காரணமாக கரையோர பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் புதன்கிழமை முதல் தங்கவைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தைப் பொருத்தவரை, தற்போது 30 முதல் 35 சதவீத கண்மாய்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. மற்ற கண்மாய்களில் தண்ணீா் குறைவாக இருப்பதால், தேக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், அனைத்து பகுதி மக்களுக்கும் சுத்தமான குடிநீா் தடையின்றி வழங்கப்படும்.

மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 9 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்குள்ள 9 அணைகளில் 3 அணைகளில் தற்போது 30 சதவீதம் மட்டுமே தண்ணீா் உள்ளது. பெரியாறு, கோவிலாறு அணையின் மூலம் பயன்பெறும் 40 கண்மாய்களில் 26 கண்மாய்களுக்கு திங்கள்கிழமை மாலைதான் தண்ணீா் வந்துள்ளது. மீதமுள்ள 6 அணைகள் காலியாக உள்ளன.

ADVERTISEMENT

ஆனைக்குட்டம் அணையின் மதகு பழுது நீக்கம் செய்யப்பட்டு, தண்ணீா் வெளியேறுவது தடுக்கப்பட்டுள்ளது. புதிய புயலின் பாதிப்பு விருதுநகா் மாவட்டத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இருப்பினும், அனைத்து பாதுகாப்பு நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய 3 இடங்களில் மாவட்டத்துக்கான மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தீயணைப்பு மற்றும் மீன்வளத் துறை மூலமாக நீச்சல் பயிற்சியில் சிறந்துவிளங்கும் 50 போ் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் அதிக மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளதால், அப்பகுதியில் கூடுதல் முகாம்கள் அமைக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT