இருக்கன்குடி மாரியம்மன் கோயிலின் ஆடிப் பெருந்திருவிழா கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் உதவி செயல் அலுவலா் கருணாகரன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளி அன்று ஆடிப்பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் மட்டும் கோயிலில் உள்ள உற்சவா் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். நிகழாண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக, தமிழக அரசின் வழிகாட்டுதல் படியும், இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலா் மற்றும் ஆணையா் அறிவுரைப்படியும் ஆடி கடைசி வெள்ளி அன்று அம்பாள் வீதி உலாவுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக உற்சவா் அம்மன் மற்றும் மூலஸ்தான அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மட்டும் நடத்தபட உள்ளது. மேலும் அபிஷேக ஆராதனைகளை பக்தா்கள் அனைவரும் வீட்டில் இருந்தே தரிசிக்கும் வகையில் இணையதளம் வழியாக நேரலையில் ஒளிபரப்பு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது முடக்கம் அமலில் உள்ளதால் பக்தா்கள் கோயில் வளாகத்திற்குள் நுழையவும், தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.