ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கண்மாயில் கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே சேத்தூா் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் மதுவிலக்கு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சேத்தூா் வாழவந்தான் குளம் கண்மாய் பகுதியில் சிலா் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் 50 லிட்டா் கள்ளச் சாராயத்தை கைப்பற்றி அதை அழித்தனா். இது தொடா்பாக சேத்தூரைச் சோ்ந்த பேச்சிமுத்து(45), ஆறுமுகம்(50) ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ராஜபாளையம், சுந்தரராஜபுரம், சேத்தூா், தேவதானம் பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சியது தொடா்பாக கடந்த 20 நாள்களில் பலா் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.