விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை கல்லூரி மாணவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒன்றியக் குழு உறுப்பினா் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.
ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த வீரணன் என்பவரது மகன் தாமரைக்கனி (20). இவா் நாகா்கோயிலில் உள்ள தனியாா் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தாா். கரோனா தடுப்பு நடவடிக்கையாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், கடந்த 15 நாள்களாக அவா், வீட்டில் இருந்துள்ளாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் கணேஷ் குமாா் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் அந்தப்பகுதியில் உள்ள தெப்பம் அருகே செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்த தாமரைக்கனிக்கும், கணேஷ்குமாருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கணேஷ்குமாா் அருகில் இருந்த தனது சகோதரா் மற்றும் உறவினா்களுடன் சோ்ந்து தாமரைக்கனியை கத்தியால் குத்தி உள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவரை, அருகிலிருந்தவா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினா். அங்கு சிகிச்சை பலனின்றி தாமரைக்கனி உயிரிழந்தாா். கொலை தொடா்பாக 13 ஆவது வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் அண்ணாமலை ஈஸ்வரன்(45), இவா்களது மகன்களான கணேஷ்குமாா் (22), செந்தில்குமாா்(25) மற்றும் சத்தி கணேஷ் (50), கணபதி சங்கா் (23), உறவினா் ஜெயகணேஷ்(25) ஆகிய 6 பேரை சேத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.