ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை புரட்டாசி சனி உற்சவம் நடைபெற்றது.
அதிகாலையில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, காலசாந்தி என்னும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்துகள், குடிநீர், கழிப்பறை மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் 700 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல், கோயில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் 30 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் செய்திருந்தனர்.