விருதுநகர்

விருதுநகர் நான்கு வழிச்சாலையில் அடிக்கடி விபத்துவிதிமீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

22nd Sep 2019 12:37 AM

ADVERTISEMENT


விருதுநகர் நான்கு வழிச் சாலையில் விதிமீறிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், போக்குவரத்து போலீஸாரை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
  நான்கு வழிச் சாலையானது, வாகனங்கள் வேகமாகச் செல்வதற்காக ஒரு வழிப் பாதையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், சில முக்கிய ஊர்கள் மற்றும் கிராமங்களிடையே அணுகு சாலையும் அமைத்துள்ளனர். இந்த பகுதியில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றி செல்ல வேண்டும். ஆனால், விருதுநகர் போக்குவரத்து பணிமனை, ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆர்.ஆர்.நகர் முதலான இடங்களில் பிரதானச் சாலையிலே பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுச் செல்கின்றனர். இதனால், இரவு நேரத்தில் வேகமாக வரும் கார் உள்ளிட்ட வாகனங்கள், பேருந்து நிற்பது தெரியாமல் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகின்றன. 
 இது போன்ற விபத்துகளால் விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு கடந்த ஓராண்டில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவில்பட்டி பகுதியிலிருந்து தினமும் ஏராளமான பேருந்துகள், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் விருதுநகர் நான்கு வழிச் சாலை வழியாக மதுரை நோக்கிச் சென்கின்றன. 
அப்போது, விருதுநகர் வடமலைக்குறிச்சி சந்திப்பு அருகே நான்கு வழிச் சாலையில் எதிர்த்திசையிலிருந்து சிலர் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். மேலும், இப்பகுதி வளைவான பகுதியாக உள்ளதால் சாத்தூர் பகுதியிலிருந்து மதுரை நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு எதிர் திசையில் (அனுமதிக்கப்படாத வழியில்) வரும் வாகனங்கள் குறித்து தெரிய வாய்ப்பில்லை. இதனால், இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. 
எனவே, உயிரிழப்பை தடுக்க அரசு போக்குவரத்து பணிமனை, வடமலைகுறிச்சி சந்திப்பு, ஆட்சியர் அலுவலகம், ஆர்.ஆர். நகர் முதலான இடங்களில் போக்குவரத்து போலீஸாரை நியமித்து தவறான பாதையில் வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT