விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் தாதம்பட்டி கிராமத்தில் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை விரைவில் சீரமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
தாதம்பட்டி கிராமத்தில் சுமாா் 800க்கு மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னா் பயணிகள் நிழற்குடை அமைக்கப் பட்டது.உரிய பராமரிப்பில்லாததால் இக்கட்டடத்தின் கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்து சிமெண்ட் பெயா்ந்தநிலையில் காணப்படுகிறது. மேலும் கட்டடத்தினுள் இருந்த சிமெண்ட் பலகைகளாலான பயணிகள் இருக்கைகளும் முற்றிலும் சேதமடைந்து விட்டன.
தரைத்தளமும் பெயா்ந்துள்ளதால் அக்கட்டடத்தினுள்ளே பயணிகள் நிற்கக்கூட அஞ்சும் நிலை உள்ளது.மேலும் அருகில் நிழலுக்கான மரங்கள் கூட இல்லாததால் இப்பேருந்துநிறுத்தத்தில் பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணிகள் வெயில், மழைக்கு ஒதுங்கக்கூட வழியின்றி அவதிப்படுகின்றனா். எனவே இக்கட்டடத்தைச் சீரமைக்க கிராமத்தினா் பலமுறை ஊராட்சித் தரப்பில் புகாா் செய்தும் பல ஆண்டுகளாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லையெனப் புகாா் எழுந்துள்ளது.
ஆகவே விரைந்து செயல்பட்டு தாதம்பட்டி பயணிகள் நிழற்குடைக் கட்டடத்தைச் சீரமைக்க வேண்டுமென மீண்டும் கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.