விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்பி.கே. கலைக்கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை தீயணைப்பு மற்றும் அவசர கால மீட்பு ஒத்திகைப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் தீயணைப்புத்துறை மூலம் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்குக் கல்லூரிச் செயலாளர் பா.சங்கரசேகரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ந.முத்துச்செல்வன் முன்னிலை வகித்தார். தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நிலைய அலுவலர் ஏ.கே.நாகராஜன் மற்றும் அத்துறையின் முன்னணி தீயணைப்பாளர் மாதவன் ஆகியோர் கல்லூரி மாணவ, மாணவியருக்கு தீயணைப்பு மற்றும் அவசரகால மீட்பு ஒத்திகைப் பயிற்சியினை நேரில் வழங்கி விரிவாக எடுத்துரைத்தனர். அப்போது, அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், தீப்பிடித்தால் கையாள்வது மற்றும் பல்வேறுவிதமான பொருள்களான சமையல் எரிவாயு உருளை, எண்ணெய் வகைகள், பெட்ரோலியப்பொருள்கள், வெடிக்கும் தன்மையுள்ள பொருள்களில் ஏற்படும் தீயை அணைக்கும்விதம் குறித்தும் செயல் விளக்கமளித்தனர். மேலும் தீயில் சிக்கியோர், வெள்ளத்தில் சிக்கியோரை மீட்டு அவர்களுக்கு வழங்கவேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்தும் செயல்விளக்கமளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தேசிய மாணவர்படை ஒருங்கிணைப்பாளர்கள் தி.சுப்பிரமணியன் மற்றும் எஸ்.பாக்கியராஜி ஆகியோர் செய்திருந்தனர்.