விருதுநகர்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில்காட்சிப்பொருளான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

22nd Sep 2019 12:38 AM

ADVERTISEMENT


இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பழுதால் பக்தர்கள் தாகத்தால் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் இக்கோயிலில் பக்தர்களின் குடிநீர் வசதிக்காக அருகேயுள்ள வைப்பாற்றில் இருந்து 3 உறைகிணறுகள் மற்றும் 4 ஆழ்துளைக்கிணறுகள் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. 
 கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளிப்பதற்காக தனிநபர்கள்  சிலர் ஆற்றுப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீரை கட்டணத்துக்கு விநியோகிக்கின்றனர். இதற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என கூறப்படுகிறது. இவ்வாறு தனி நபர்கள் தண்ணீர் எடுப்பதால் கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை மற்றும் உறை கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். 
  கோயிலின் வெளிப் பிரகாரத்தில் சிறு, சிறு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆழ்துளைக்கிணற்று நீர் சுத்திகரிக்கப்படாமல் வழங்கப்பட்டு வருகிறது.
 அதே சமயம் உள்பிரகாரத்தில் பக்தர்களுக்காக 2 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பராமரிக்கப்படாமல் செயல்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. 
 வெளிப்பிரகாரத்திலும் உவர் நீரே கிடைப்பதால் பக்தர்கள் குடிநீருக்காக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அங்குள்ள கடைகளில் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி தாகத்தை தீர்த்து வருகின்றனர். 
 எனவே, கோயிலில் போதிய குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும், உள்பிரகாரத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை உடனே சீரமைக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
 இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், சன்னிதி அருகே உள்ள  குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT