விருதுநகர்

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பயிற்சி முகாம்

17th Sep 2019 07:15 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு, வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
       ராஜபாளையம் வட்டத்தில் மொத்தமுள்ள 314 வாக்குச் சாவடிகளில், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 261 வாக்குச்சாவடிகளும், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 53 வாக்குச் சாவடிகளும் உள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் நிலை அலுவலர்களுக்கு, வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பயிற்சியும், வாக்காளர் உதவி செல்லிடப்பேசி செயலியை பயன்படுத்துவது குறித்த தொழில்நுட்பப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
       வருவாய் கோட்டாட்சியர் காளிமுத்து தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமில், வட்டாட்சியர் ஆனந்தராஜ், துணை வட்டாட்சியர்கள் காளிராஜன், அருளானந்தம், வருவாய் ஆய்வாளர்கள் மாரியப்பன், கற்பகம், வேல்பிரியா, முத்துராமன் உள்பட வருவாய்த் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
     பயிற்சியில் கலந்துகொண்ட நிலை அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தேர்தல் துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் பயிற்சி வழங்கினார். 
  இதில், வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும், வாக்காளர் உதவி செல்லிடப்பேசி செயலியை தரவிறக்கம் செய்து, பயன்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
      மேலும், வாக்காளர்கள் செல்லிடப்பேசி செயலி மூலம் அளிக்கும் திருத்தங்கள் குறித்து நேரில் சென்று உறுதிப்படுத்தி, மாற்றங்கள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் பரிந்துரைக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது.
    கோட்டாட்சியர் காளிமுத்து ஏற்பாட்டின்பேரில், பயிற்சியில் கலந்துகொண்ட அனைத்து அலுவலர்களுக்கும், சிவகாசி அனில்குமார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT