விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் பாளையம்பட்டி அருகேயுள்ள அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிப் பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் நிழற்குடை அமைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
பாளையம்பட்டியிலிருந்து கட்டங்குடி செல்லும் சாலையும், மதுரை-தூத்துக்குடி நான்குவழிச் சாலையும் சந்திக்கும் இடம் அருகே அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிப் பேருந்து நிறுத்தம் உள்ளது. இக்கல்லூரி அருகிலேயே அரசு தொழிற்கல்வி நிறுவனமும் உள்ளது. எனவே, தினமும் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இங்கு பயணிகள் நிழற்குடை இல்லை.
இதனால் பேருந்துக்காகக் காத்திருக்கும் மாணவ, மாணவியர் வெயில், மழைக்கு ஒதுங்கக்கூட இடமில்லை. மேலும், அருகில் மரங்களும் இல்லாததால், மாணவ, மாணவர்கள் தவிக்கும் நிலை உள்ளது. எனவே, இப்பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என, மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.