விருதுநகர்

விருதுநகரில் கல்வித் துறை அதிகாரி  வீட்டுக் கதவை உடைத்து 38 பவுன் நகைகள் திருட்டு

7th Sep 2019 02:26 AM

ADVERTISEMENT

விருதுநகரில் கல்வித் துறை அதிகாரி வீட்டுக் கதவை உடைத்து 38 பவுன் நகைகள் வெள்ளிக்கிழமை திருடப்பட்டுள்ளன.
விருதுநகர் என்ஜிஓ காலனியில் குறிஞ்சி தெருவைச் சேர்ந்த திருப்பதி மகன் கோவிந்தராஜ் (54). இவர், விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (50), நந்தி ரெட்டியபட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் வீட்டுக் கதவைப் பூட்டிவிட்டு, வெள்ளிக்கிழமை காலை வேலைக்குச் சென்றுவிட்டனர். அதையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நிலையில், மாடி வழியாக இறங்கிய திருடர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்து  பீரோவிலிருந்த 38 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் பணம் மற்றும் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள கடிகாரப் பெட்டி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுவிட்டனர். 
மாலையில் வீடு திரும்பிய ஆசிரியர் மஞ்சுளா, கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த நகைகள், பணம் உள்ளிட்டவை திருடப்பட்டிருப்பதை அறிந்தார். 
இது குறித்து தனது கணவர் மற்றும் பாண்டியன் நகர் போலீஸாருக்கு தகவல்  தெரிவித்துள்ளார். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வீட்டை சோதனையிட்டனர். மேலும், காவல் மோப்ப நாய் வீட்டிலிருந்து தண்டவாளப் பகுதி வரை ஓடிச்சென்று நின்றது. தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். 
திருட்டுச் சம்பவம் நடைபெற்ற வீட்டை, காவல் உதவிக் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது குறித்து பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT