விருதுநகர்

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கோரி பொதுமக்கள் முற்றுகை

4th Sep 2019 07:26 AM

ADVERTISEMENT

கோயில்புலிகுத்தி கிராமத்தில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து அக்கிராம மக்கள் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை  முற்றுகையிட்டனர்.
 விருதுநகர் அருகே உள்ள இ.குமாரலிங்கபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கோயில்புலிகுத்தி கிராமம் உள்ளது. இங்கு 130-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராம மக்களுக்கு, அர்ச்சுனா ஆற்றில் கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. 
இந்நிலையில், ஆற்றுப்படுகையில் இருந்த கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவது முற்றிலும் தடைபட்டுள்ளது. ஆனால் கிணற்றை தூர்வாரவோ, புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கவோ ஊராட்சி நிர்வாகம்  எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். இதனால், கடந்த 4 மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்துள்ளது. 
இதன் காரணமாக, இப்பகுதி மக்கள் ஒரு குடம் குடிநீரை ரூ.10 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும், வீட்டுக்கு தேவையான தண்ணீரும் இல்லாததால், அதற்கான தண்ணீரை குடம் ரூ.4 கொடுத்து வாங்கிப் பயன்டுத்தி வந்துள்ளனர். 
இதுகுறித்து, ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அர்ச்சுனா ஆற்றில் உள்ள கிணறை தூர்வார வேண்டும். புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 
சுமார் மூன்று மணி நேர தாமதத்திற்கு பின்அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இரண்டு நாள்களுக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். 
இந்த போராட்டத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சி.பாண்டியன் உள்பட கிராம மக்கள் பலர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT