விருதுநகர்

"நீர் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவதில் விருதுநகர் மாவட்டம் 8 ஆவது இடம்'

4th Sep 2019 07:25 AM

ADVERTISEMENT

தமிழக அளவில் நீர் மேலாண்மை  திட்டத்தை செயல்படுத்துவதில் விருதுநகர் மாவட்டம் எட்டாவது இடத்தில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம்  தெரிவித்தார்.
விருதுநகரில் தனியார் திருமண மண்டபத்தில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம், புதுதில்லி மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நீர் மேலாண்மை இயக்கத்தின் (ஜல் சக்தி அபியான்) முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஆட்சியர் அ. சிவஞானம்,  அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சொட்டு நீர் பாசன அமைக்கும் முறை குறித்தும்,  மாதிரி நீர்வடிப்பகுதி அமைப்பினையும், அசோலா வளர்ப்பு முறைகள் பற்றி அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கண்காட்சியினை  திறந்து வைத்தார். 
இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியது: மத்திய நீர் வள ஆதார அமைப்பு இந்திய அளவில் நிலத்தடி நீர்மட்டம் குறித்து கள ஆய்வு நடத்தியதில், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 541 வருவாய் குறுவட்டங்களில் (பிர்க்கா) நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 14 வருவாய் குறுவட்டங் களில் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, இப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கில் நீர்மேலாண்மை, நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு, புராதன நீர் நிலைகள் மேம்பாடு, பயனற்ற ஆழ்துளை கிணறுகளை நீர் செரிவு அமைப்பாக மாற்றுதல், நீர்வடி நில பகுதி மேம்பாடு மற்றும் தீவிர மரங்கள் வளர்ப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதாவது, நமக்குத் தேவையான நீரின் அளவை வரையறுத்துக் கொண்டு, நீரை சரியான அளவு பயன்படுத்த வேண்டும் என்பதும், தேவைக்கு அதிகமான நீரை சேமிக்க வேண்டும் என்பதும், நீரினை மறுசுழற்சி செய்ய வேண்டும் என்பது நீர் மேலாண்மை இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். 
இயற்கையை பேணி பாதுகாக்கின்ற வகையில் அதிகமான மரக்கன்றுகளை நட வேண்டும். தமிழக அளவில் நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் விருதநகர் மாவட்டம் எட்டாவது இடத்தில் உள்ளது என்றார்.
முன்னதாக, நுண்ணீர் பாசன தொழில்நுட்ப புத்தகத்தினை ஆட்சியர் வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து, ஸ்ரீவில்லிப்புத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியர் வீரபுத்திரன், அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் ராஜாபாபு,  பண்ணை மேலாளர் கார்த்திக், முன்னோடி விவசாயி சிவசாமி ஆகியோர் பேசினர். இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் அருணாச்சலம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT