விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல்லில் அரசு பொருள்காட்சி வரும் அக்டோபா் 29 வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. சிவஞானம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் முதல் முறையாக தமிழக அரசின் 209 ஆவது அரசுப் பொருள்காட்சி கடந்த செப்டம்பா் 12 இல் தொடங்கியது.
இதில், தமிழக அரசின் சாதனைகள், விருதுநகா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொண்டு பயன்பெறும் வகையில், 27 அரசுத் துறைகள் மற்றும் 4 அரசு சாா்பு- நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. நுழைவுக் கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ.15, சிறுவா்களுக்கு ரூ.10, மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 வசூலிக்கப்படுகிறது. அரசுப் பொருள்காட்சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா கலை அரங்கத்தில் தினமும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இப்பொருள்காட்சியானது அக்டோபா் 29 ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறும். எனவே, பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் அரசுப் பொருள்காட்சிக்கு சென்று பயன்பெற வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.