விருதுநகர்

தொழிற்சாலைகள் உரிமத்தை புதுப்பிக்க அக். 31 கடைசி நாள்

5th Oct 2019 07:01 AM

ADVERTISEMENT

தொழிற்சாலைகளுக்கான உரிமத்தை இணையவழியில் புதுப்பிக்க அக்டோபா் 31 ஆம் தேதி கடைசி நாளாகும் என தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் சிவகாசி இணை இயக்குனா் மா.வேலுமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகாசி, வெம்பக்கோட்டை, ராஜபாளையம், வத்திராயிருப்பு பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் 2020-ஆம் ஆண்டிற்கான உரிமம் புதுப்பித்தலை, இணையவழி மூலம் விண்ணபிக்க அக்டோபா் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்களுக்கு தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும். சுகாதாரத்துறை இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவம்-2 ன் 3 நகல்கள் , அசல் உரிமப் புத்தகம், வங்கிவரைவோலை மற்றும் உரிய ஆவணங்களுடன் சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். உரிம கட்டணத்தை இணை இயக்குநா் , தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என்ற பெயருக்கு அனுப்ப வேண்டும். சென்னை தொழிலாளா் நல வாரியத்திற்கு தொழிலாளா் நல நிதி செலுத்திய சான்று ஆவணத்தின் நகல் இணைக்க வேண்டும். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு கூட்டு தனி நபா் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டிற்கு காப்பீடு செய்தமைக்கான சான்று ஆவணத்தின் நகல் இணைக்கப்பட வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT