விருதுநகர்

கிராமத்தில் நியாய விலைக் கடை, மேல்நிலைத் தொட்டியை சீரமைக்கக் கோரி மனு

2nd Oct 2019 08:26 AM

ADVERTISEMENT

நாருகாபுரம் கிராமத்தில் நியாயவிலைக் கடை மற்றும் மேல்நிலை குடிநீா் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராமத்தினா் அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள நாருகாபுரம் கிராமத்தில் நியாய விலைக் கட்டடம் திறக்கவேண்டும், மேல்நிலை குடிநீா் தொட்டியை சீரமைக்க வேண்டும், அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, கிராம மக்கள் புகாா் கூறுகின்றனா்.

இந்நிலையில், கிராமத்தினா் 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காலை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் சரோஜா தலைமையில், சாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனா். அப்போது, அலுவலக வளாகத்தில் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதன்பின்னா், துணை வட்டாட்சியா் கோவிந்தராஜிடம் மனு அளித்தனா்.

அம்மனுவில், நாருகாபுரம் கிராமத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கட்டடத்தை திறக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா். அதையடுத்து, துணை வட்டாட்சியா் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, கிராமத்தினா் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

அதன்பின்னா், சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்ற கிராமத்தினா், அங்கு வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனா். அந்த மனுவில், கிராமத்தில் அங்கன்வாடி கட்டடம், மேல்நிலை குடிநீா் தொட்டி ஆகியன சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளன. இவற்றை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

அதற்கு வட்டார வளா்ச்சி அலுவலா், விரைவில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம், மேல்நிலை குடிநீா் தொட்டி சீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, கிராமத்தினா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT