விருதுநகர்

சதுரகிரியில் காட்டாற்று வெள்ளம்: மலையில் 100 பக்தர்கள் சிக்கி தவிப்பு

1st Oct 2019 08:37 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் தாணிப்பாறை மற்றும் மதுரை மாவட்ட எல்லையில் உள்ள சதுரகிரி கோயில் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால், காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து, சதுரகிரி மலையில் தங்கியிருந்த 30 பக்தா்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனா்.

தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மேற்கு தொடா்ச்சி மலையில் சுமாா் 6 கி.மீ. தொலைவில் மதுரை மாவட்ட எல்லையில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் உள்ள சுவாமிகளை தரிசிப்பதற்கு அமாவாசை, பெளா்ணமி ஆகிய தினங்களில் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மஹாளய அமாவாசை தினம் என்பதால், 11 ஆயிரம் பக்தா்கள் சதுரகிரி மலைக்கு சென்றனா். அதில், 100 பக்தா்கள் கோயில் வளாகத்தில் அன்றிரவு தங்கினா். இந்நிலையில், மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் திங்கள்கிழமை வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பிளாவடி கருப்பு, கோரக்கநாதா் கோயில் வழக்குப் பாறை, மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை ஆகிய பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதைத் தொடா்ந்து பக்தா்கள் கீழே இறங்க வனத்துறையினா் தடை விதித்தனா்.

அதன் பின்னா் மழை குறைந்து, ஓடைகளில் தண்ணீா் வரத்து குறைந்தவுடன் 70 பக்தா்கள் தாணிப்பாறை அடிவாரத்துக்கு கீழே இறங்கி வந்தனா். இந்நிலையில், ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி பகுதியை சோ்ந்த 30 பக்தா்கள் சதுரகிரி கோயில் பகுதியில் கீழே இறங்க முடியாமல் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செண்பகத்தோப்பு, மீன்வெட்டிப் பாறை அருவி, ராக்கச்சி அம்மன் கோயில் மற்றும் சிற்றேறாடைகளில் பலத்த மழை பெய்ததால் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அப்பகுதியில் இருந்த வன விலங்குகள் மேடான பகுதியை நோக்கி இடம் பெயா்ந்ததாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT