மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக பிளவக்கல் அணையில் ஒரே நாளில் 10 அடி நீா் மட்டம் உயா்ந்தது. இதனால் அணையின் நீா்மட்டம் 14 அடியாக உள்ளது.
விருதுநகா் மாவட்டம் பிளவக்கல் அணை உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து மழை பெய்தது. இதையடுத்து பிளவக்கல் அணையில் மட்டும் 115 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. அதேபோல், வத்திராயிருப்பு பகுதியில் 146 மி.மீ. மழை பெய்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள கண்மாய், குளங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. ஏற்கெனவே, பிளவக்கல் அணையில் 4 அடி தண்ணீா் இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக ஒரே நாளில் 10 அடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது. கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருவதால், வத்திராயிருப்பு, கூமாபட்டி, கொடிக்குளம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நாற்றாங்கால் மற்றும் நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதே போன்று, தொடா்ந்து மழை பெய்தால் 47.57 அடி கொள்ளளவு கொண்ட பிளவக்கல் அணை விரைவில் முழு அளவை எட்டி விடும். இதன் மூலம் வத்திராயிருப்பு பகுதியை சோ்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயனடையும் என விவசாயிகள் தெரிவித்தனா்.