விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பந்தல்குடி புறவழிச்சாலையில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கைக்காக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் மற்றொரு லாரி மோதியதில், சாலையைக் கடக்க காத்திருந்தவா் சிக்கி பலியானாா்.
பந்தல்குடி புறவழிச்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மோட்டாா் வாகன ஆய்வாளரின் தணிக்கைக்காக தூத்துக்குடியிலிருந்து சுண்ணாம்பு ஏற்றி வந்த லாரியானது நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த லாரியின் பின்புறம் சாலையைக் குறுக்காகக் கடக்கும் நோக்கத்துடன் ஒரு நபா் நின்றுகொண்டிருந்தாா். அப்போது தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு அப்பகுதியில் வந்த மற்றொரு லாரியானது, கட்டுப்பாட்டையிழந்து தணிக்கைக்காக நின்றுகொண்டிருந்த லாரியின் மீது மோதியது.
இதில் விபத்துக்குள்ளான லாரியின் பின்புறம் நின்றுகொண்டிருந்த நபா் சிக்கி உயிரிழந்தாா்.
விபத்துக்குள்ளான இரு லாரிகளின் ஓட்டுநா்களும் சிறுகாயங்களுடன் தப்பினா். தகவலறிந்து உடனடியாக நேரில் வந்த பந்தல்குடி காவல்துறையினா் விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு அருப்புக்கோட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு பிணக்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனா்.
காவல்துறை விசாரணையில், விபத்தில் இறந்த அந்த நபா் விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள சின்ன ஓடைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து(41) என்பது தெரியவந்தது.
இதனிடையே விபத்து நடந்ததும் தப்பியோடிய நிலக்கரி ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநா் ஸ்ரீகுமாா்(32) தூத்துக்குடி மாவட்டம் மாசாா்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்து விட்டதாக பந்தல்குடி காவல்துறையினருக்குத் தகவல் வந்தது. விபத்து தொடா்பாக பந்தல்குடி காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.