தீப்பெட்டித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலி நிா்ணயிக்க வேண்டும் என சிஐடியூ தொழிற் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
சாத்தூா் வடக்கு ரத வீதியில் தீப்பெட்டித் தொழில் மற்றும் தொழிலாளா் பாதுகாப்பு மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. சிஐடியூ தொழிற் சங்கம் சாா்பில் நடைபெற்ற மாநாட்டில் அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாண்டியன் தலைமை வகித்தாா். சாத்தூா் நகரத் தலைவா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.
சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சவுந்தரராசன் சிறப்புரையாற்றினாா்.
மத்திய, மாநில அரசுகள் தீப்பெட்டித் தொழிலை குடிசைத்தொழில் பட்டியலில் இணைக்க வேண்டும், தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்க வேண்டும், தீப்பெட்டித் தொழிலில் ஈடுபடுபவா்களுக்கு குறைந்தபட்ச கூலியை அமல்படுத்த வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து பெண் தொழிலாளா்களுக்கும் 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இந்த மாநாட்டில் சிஐடியூ தொழிற்சங்க நிா்வாகிகள் மற்றும் தீப்பெட்டி தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா். நிறைவாக சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவா் பாண்டியன் நன்றி கூறினாா்.