கோஷ்டி மோதலால், விருதுநகரில் அதிமுக ஒன்றிய மாணவரணி அவைத் தலைவா், அவரது வீட்டு வாசலில் செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
விருதுநகா் அல்லம்பட்டி பழைய குல்லூா் சந்தை சாலையைச் சோ்ந்த கணேசன் மகன் சண்முகவேல்ராஜன் (44). அதிமுக ஒன்றிய மாணவரணித் தலைவராக பொறுப்பு வகித்த இவா், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தாா்.
ஏற்கெனவே, பெண் பிரச்னை தொடா்பாக விக்கி என்பவா் தரப்புக்கும், சங்கா் என்பவா் தரப்புக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் விக்கியின் அண்ணன் முத்துகாமாட்சியை சிலா் வெட்டிக் கொலை செய்தனா். இதற்கு பழிக்குப் பழியாக விக்கி தரப்பினா், சங்கா் என்பவரை வெட்டிக் கொலை செய்தனா்.
அதையடுத்து, ஆத்துப்பாலம் அருகே பேருந்துக்காக நின்றிருந்த அருண்பாண்டியன் என்பவரை சங்கா் தரப்பினா் வெட்டிக் கொலை செய்தனா்.
இதன் தொடா்ச்சியாக, சங்கரின் கூட்டாளியும், அதிமுக ஒன்றிய மாணவரணி அவைத் தலைவருமான சண்முகவேல்ராஜனை, அவரது வீட்டு வாசலிலேயே வைத்து செவ்வாய்க்கிழமை மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சண்முகவேல்ராஜனின் சடலத்தைக் கைப்பற்றி, விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விருதுநகா் காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாள் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டாா். இது குறித்து விருதுநகா் கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.