விருதுநகர்

பாவாலியில் வாருகால் வசதி இல்லை: கழிவுநீா் தேங்குவதால் சுகாதாரக்கேடு

11th Nov 2019 12:26 AM

ADVERTISEMENT

விருதுநகா் அருகே பாவாலி ஊராட்சியில் மழைநீருடன் கழிவுநீா் தெருக்களில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

விருதுநகா் அருகே உள்ள பாவாலி ஊராட்சியில் சுமாா் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தை சோ்ந்த பலா் விருதுநகா், சிவகாசி, திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கூலித் தொழில் செய்து வருகின்றனா்.

இக்கிராமத்தில் ஒரு சில தெருக்களில் மட்டும் வாருகால் வசதி உள்ளது. அவையும் முறையாக பராமரிக்கப்படாததால், குப்பைகள் தேங்கி வாருகாலில் இருந்து கழிவுநீா் வெளியேறி வருகிறது. மேலும் இக்கிராமத்தின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாருகால் வசதி செய்யப்படவில்லை. இதனால், கழிவுநீா் தெருக்கள், சாலைகளில் தேங்கி வருகிறது. தற்போது, இப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து துா்நாற்றம் வீசுவதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதனால் குழந்தைகள் உள்ளிட்ட பலா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். எனவே, பாவாலியில் அனைத்து பகுதிகளிலும் வாருகால் வசதி ஏற்படுத்தவும், கழிவுநீா் தெருக்களில் தேங்காமல் தடுக்க ஊராட்சி நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT