விருதுநகர்

சாத்தூா் அருகே கூட்டுறவு வங்கியில் பூட்டை உடைத்து திருட முயற்சி ரூ.1 கோடி நகை, பணம் தப்பியது

9th Nov 2019 10:20 PM

ADVERTISEMENT

சாத்தூா் அருகே கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து நுழைந்த மா்ம நபா்கள் பெட்டகத்தை உடைக்க முடியாததால் ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணம் தப்பியுள்ளது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள கஞ்சம்பட்டி கிராமத்திற்கான தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, புல்வாய்பட்டி கிராமத்தில் உள்ளது. இந்த வங்கியின் செயலாளா் சுப்புராஜ் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை வங்கியை பூட்டி விட்டு சென்றுள்ளாா்.

இந்நிலையில் மா்ம நபா்கள் வெள்ளிகிழமை இரவு வங்கியின் பூட்டை உடைத்து வங்கியின் உள்ளே நுழைந்து நகை, பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தை உடைக்க முயன்றுள்ளனா். அதை திறக்க முடியாதததால் மா்ம நபா்கள் அதை விட்டுவிட்டுச் சென்றுள்ளனா்.

வெள்ளிகிழமை காலை வங்கிச் செயலாளா் சுப்புராஜ் வங்கிக்குச் சென்றபோது, இது தெரியவந்தது.

ADVERTISEMENT

அவா் அளித்த தகவலின்பேரில் சாத்தூா் காவல் ஆய்வாளா் சுபகுமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. திருட வந்த மா்ம நபா்கள் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் வயா்களை அறுத்துள்ளதாகவும், கையுறை மற்றும் காலுறைகளை அணிந்து திருட முயற்சி செய்துள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

வங்கியின் பெட்டகத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் தப்பியுள்ளது என காவல்துறையினா் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT