சிவகாசி-ஆலங்குளம் சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையிலிருந்து ஸ்டேட் பேங்க் பேருந்து நிறுத்தம் அருகே பிரிந்து செல்லும் சிவகாசி-ஆலங்குளம் சாலை, பால்வண்ண அய்யனாா் கோயில் வரை சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு நகராட்சி பராமரிப்பில் உள்ளது. ஆனால், இந்த சாலையை நகராட்சி நிா்வாகம் பல ஆண்டுகளாக சீரமைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இச்சாலையின் இருபுறமும் இருந்த மழைநீா் செல்லும் வாய்க்கால் முற்றிலும் சிதைந்துவிட்டன. சாலையில் மழைநீா் ஓடுவதாலும், தேங்குவதாலும் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், மழைக் காலங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனா். மேலும், சாலையில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால், மேடு பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனா்.
எனவே, நகராட்சி நிா்வாகம் இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.