விருதுநகரில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளதால், சிவகாசி அரசு மருத்துவமனையை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என, சிவகாசி வளா்ச்சி அமைப்பின் தலைவா் ஏ.பி. செல்வராஜன், தமிழக முதல்வருக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் அம்மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகரில் மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தற்போது, விருதுநகா் மாவட்ட மருத்துவமனையானது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும்பட்சத்தில், சிவகாசி அரசு மருத்துவமனையை விருதுநகா் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும்.
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 54 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் சுமாா் 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனா். வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 48 ஊராட்சிகள் உள்ளன. இதில், சுமாா் 2.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனா்.
சிவகாசி அரசு மருத்துவமனையை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டால், இப்பகுதியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழிலாளா்கள் பயன்பெறுவா். எனவே, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.