உள்ளாட்சி தேர்தலுக்காக 2,698 வாக்குச் சாவடிகள் அமைப்பு: ஆட்சேபங்களை மே 2-க்குள் தெரிவிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 2,698 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 2,698 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதுகுறித்து ஆட்சேபங்களை மே 2 ஆம் தேதிக்குள் பொதுமக்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவிக்கலாம் என மாவட்டத் தேர்தல் அலுவலர்அ. சிவஞானம் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வரைவு வாக்கு சாவடிகளின் பட்டியல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கருத்துக்கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
 இக்கூட்டத்திற்கு மாவட்டத் தேர்தல் அலுவலர் அ.சிவஞானம் தலைமை வகித்துப் பேசியது:  விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்படவிருக்கும் வாக்குச் சாவடிகளின் வரைவுப் பட்டியல் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வரைவுப் பட்டியலில் மாவட்டத்தில் 2,698 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
 மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளில் ராஜபாளைத்தில் 112 வாக்குச் சாவடிகள், ஸ்ரீவில்லிபுத்தூரில் 66 வாக்குச் சாவடிகள், அருப்புக்கோட்டையில் 72 வாக்குச் சாவடிகள், சிவகாசியில் 62 வாக்குச் சாவடிகள், சாத்தூரில் 43 வாக்குச் சாவடிகள், விருதுநகரில் 61 வாக்குச் சாவடிகள், திருத்தங்கலில் 25 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 441 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 9 பேரூராட்சிகளில் செட்டியார்பட்டியில் 15, சேத்தூரில் 18, மல்லாங்கிணரில் 15, மம்சாபுரத்தில் 19, காரியாபட்டியில் 15, சுந்தரபாண்டியத்தில் 15, எஸ். கொடிக்குளத்தில் 15, வ.புதுப்பட்டியில் 15, வத்திராயிருப்பில் 18 என மொத்தம் 145 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று 11 ஊராட்சி ஒன்றியங்களில் அருப்புக்கோட்டையில் 154, விருதுநகரில் 284, காரியாபட்டியில் 149, திருச்சுழியில் 162, நரிக்குடியில் 177, ராஜபாளையத்தில் 207, ஸ்ரீவில்லிபுத்தூரில் 152, வத்திராயிருப்பில் 117, சிவகாசியில் 320, வெம்பக்கோட்டையில் 209, சாத்தூரில் 181 என மொத்தம் 2,112 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
ஆக மொத்தத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில்  2,698 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
இந்த வாக்குச்சாவடி குறித்த பட்டியல்கள் நகராட்சி, பேரூராட்சி மற்றும்  ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 
 வாக்குச் சாவடிகள் குறித்த ஆட்சேபணைகள் மற்றும் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனை கூறலாம். 
இது குறித்த கருத்துக்களை மே 2 ஆம் தேதிக்குள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் எழுத்துப் பூர்வமாக அளிக்கலாம். அதன் அடிப்படையில், பரிசீலித்து உரிய திருத்தங்கள் மேற்கொண்டு மே 4 ஆம் தேதி வாக்குச்சாவடி வரைவுப் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, மே 6 இல் வெளியிடப்படும் என்றார்.  
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) பழனி மற்றும் பேரூராட்சி, நகராட்சி அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com