விருதுநகர்

திருத்தங்கல் நகராட்சியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடுவதை கண்காணிக்க 4 குழுக்கள் அமைப்பு

29th Jun 2019 08:22 AM

ADVERTISEMENT

திருத்தங்கல் நகராட்சிப் பகுதியில் குடிநீர் இணைப்புக் குழாயில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடுவதை கண்காணிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, நகராட்சி ஆணையர் சுவாமிநாதன் கூறினார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை கூறியது:  திருத்தங்கல் நகராட்சிக்கு மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் தினசரி 15 லட்சம் லிட்டர் வழங்கப்பட வேண்டும். தற்போது, 8 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், ஆணைக்கூட்டம் அணைப் பகுதியில் நகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள கிணற்றிலிருந்து தினசரி 3 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது.
தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நகராட்சிப் பகுதியில் வாரத்தில் ஒரு நாள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் விநியோகிக்கப்படும் நேரத்தில் பலர் குடிநீர் குழாயில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை திருடுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, தற்போது அதனைக் கண்காணிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்கள் ஆய்வு நடத்தியபோது, கடந்த 7 நாள்களில் 5 மின் மோட்டார்களை பறிமுதல் செய்ததுடன், அவர்களது குடிநீர் இணைப்புக் குழாயையும் துண்டித்துள்ளது. எனவே, பொதுமக்கள் குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் பிடிக்கக் கூடாது. மீறி செயல்பட்டால், மோட்டார் பறிமுதல் செய்வதுடன், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். மீண்டும் இணைப்பு வேண்டுமெனில்,  துண்டிக்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்கள் கழித்து நகராட்சியில் புதிய இணைப்புக் கோரி விண்ணப்பிக்க வேண்டும். அதையடுத்து, ஆய்வு செய்யப்பட்டு 
குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT