விருதுநகர்

சாத்தூர் அருகே தரை பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

29th Jun 2019 08:21 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சத்திரம்-துலுக்கன்குறிச்சி சாலை பாலத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் அருகே சத்திரம்-துலுக்கன்குறிச்சி சாலையின் குறுக்கே தரை பாலம் உள்ளது. இது, சத்திரத்திலிருந்து-துலுக்கன்குறிச்சி கிராமத்துக்கு இணைப்புச் சாலையாக உள்ளதால், பட்டாசு தொழிற்சாலைகளுக்கும் மற்றும் சிற்பிபாறை, ஏழாயிரம்பண்ணை, சங்கரபாண்டியாபுரத்திலிருந்து துலுக்கன்குறிச்சி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் குறுக்குப் பாதையாகவும் உள்ளது.
சத்திரம் வழியாகச் சென்றால் 3 கிலோ மீட்டர் தொலைவு சுற்றிச் செல்லவேண்டும் என்பதால், இந்தப் பாதையை அனைவரும் பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது இந்த சாலையிலுள்ள தரை பாலம், சில மாதங்களுக்கு முன் பெய்த மழையில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த தரை பாலம் சேதமடைந்து சில மாதங்களுக்கு மேலாகியும், பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, தரை பாலத்தை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT