பிரதோஷத்தை முன்னிட்டு, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமியை தரிசிக்க திங்கள்கிழமை 11 ஆயிரம் பக்தர்கள் வந்திருந்தனர்.
விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு (ஜூலை 31), ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை தினத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தாணிப்பாறைக்கு வருவதற்கான வாகனத் வழித்தடங்கள், மாவட்ட காவல் துறை சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மலை மீது கோயிலுக்குச் செல்லும் வழியில் பக்தர்களுக்காக 5 இடங்களில் 1.20 லட்சம் லிட்டர் குடிநீர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அன்னதானம் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்காக தினமும் 80 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், பக்தர்களுக்கு கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் சதுரகிரி கோயிலில் சுவாமி தரிதனம் செய்தனர். பிரதோஷ தினமான திங்கள்கிழமை, சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில், 11 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தற்போது போதிய மழை இல்லாததால், மலை பகுதி ஓடைகளில் தண்ணீர் வரத்து இல்லை. கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குடிநீரும் பற்றாக்குறையாக உள்ளது என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஜூலை 31 ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால், முன்னெச்சரிக்கையாக கூடுதலாக குடிநீர் வழங்க, கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, தாணிப்பாறை அடிவாரத்தில் சோதனைக்குப் பின்னரே, பக்தர்கள் மலை ஏறுவதற்கு போலீஸார் மற்றும் வனத் துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர்.