விருதுநகர்

பச்சேரி கிராமத்தில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

30th Jul 2019 08:58 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம், ம.ரெட்டியபட்டி வட்டார விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, பச்சேரி கிராம சேவை மைய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு, வட்டாரத் துணை வேளாண்மை அலுவலர் கணேசன் தலைமை வகித்து, தமிழக அரசின் உழவன் செயலியைப் பதிவிறக்கம் செய்யும் விதம் குறித்தும், அச்செயலியைப் பயன்படுத்தி தேவையான இடுபொருள்கள் பெறுதல், மானியத் திட்டங்களை அறிந்து கொள்ளுதல் பற்றியும் செயல்விளக்கமளித்தார். மேலும், ஒலி, ஒளி காட்சி மூலம் கூட்டுப்பண்ணையம் மற்றும் பயிர்க் காப்பீடு செய்தல் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.  
இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அருப்புக்கோட்டையைச் சேர்ந்த வேளாண்மை ஆலோசகர் எஸ். சந்திரசேகர், விவசாயிகள் குழுக்கள் அமைப்பது குறித்தும், உறுப்பினர் தேர்வு, வங்கிக் கணக்கு தொடங்குதல் மற்றும் கூட்டம் நடத்துதல் குறித்து பயிற்சியளித்தார். திருச்சுழி ஸ்பீச் என்ஜிஓ தொண்டு நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் பிச்சை, குழுக்களின் செயல்பாடு, சங்கம் பதிவு செய்தல், கடன் பெறுதல் குறித்து விளக்கமளித்தார். 
இதற்கான ஏற்பாடுகளை, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் மா. நாராயணன், உதவி வேளாண்மை அலுவலர் மதிராணி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பெ. கணேஷ்பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.விவசாயி பாண்டி நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT