விருதுநகர்

சேத்தூர் கண்மாயில் குடிமராமத்துப் பணியை செய்யவிடாமல் அதிமுக பிரமுகர் தடுப்பதாக விவசாயிகள் ஆட்சியரிடம் புகார்

30th Jul 2019 08:54 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் அருகே சேத்தூர் பிராக்குடி கண்மாயில் விவசாயிகள் சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த குடிமராமத்துப் பணிகளை, அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக ஒன்றியச் செயலர் தடுத்து நிறுத்தியதாக, விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானத்திடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.
       ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர், மேட்டுப்பட்டியில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பிராக்குடி கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் ஏராளமான ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
       இந்நிலையில், பதிவு பெற்ற பிராக்குடி கண்மாய் பாசனதாரர்கள் சங்கத்தினருக்கு, இக்கண்மாயில் குடிமராமத்துப் பணி செய்ய பொதுப் பணித் துறை, வட்டாட்சியர் ஆகியோர் அனுமதி அளித்திருந்தனர். அதன்பேரில், ஜூலை 18 இல் இக்கண்மாயில் பூமி பூஜையும் நடத்தப்பட்டது. பின்னர், விவசாயிகள் தங்களது சொந்த செலவில் ஒரு வார காலமாக குடிமராமத்துப் பணியை செய்துவந்துள்ளனர்.
     அப்போது, அங்கு வந்த அதிமுக ஒன்றியச் செயலர், இப்பணியை தான் ஒப்பந்தம் எடுத்துள்ளதாகவும், எனவே கண்மாயை விட் டு வெளியேறுமாறும் விவசாயிகளிடம் கூறினாராம்.        இதனால், அந்தக் கண்மாயில் கடந்த 2 நாள்களாக எந்தப் பணியும் விவசாயிகள் சார்பில் நடைபெறவில்லையாம். 
      இது குறித்து, கண்மாய் பாசனதாரர்கள் மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்தித்து புகார் மனு அளித்தனர். பின்னர், பாசனதாரர் சங்க துணைத் தலைவர் மாரியப்பன் தெரிவித்ததாவது:       பிராக்குடி, உமையங்குளம், வாழவந்தாள் கண்மாய் ஆகிய 3 கண்மாய்களிலும் குடிமராமத்துப் பணி மேற்கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டது. குடிமராமத்துப் பணிகளை விவசாயிகள் செய்யவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஒப்பந்தம் எடுத்து, குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    மேலும், கண்மாய் பணிகள் குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள், எங்களுக்கு பயிற்சியும் அளித்தனர். அதனடிப்படையில், பிராக்குளம் கண்மாயில் மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் முள்செடிகளை அகற்றி, கண்மாய் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தோம். மேலும், கரைகளை பலப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
      இந்நிலையில், வாழவந்தாள் கண்மாயை தனது மகன் பெயரில் ஒப்பந்தம் எடுத்து பணிகள் செய்துவரும் அதிமுக ஒன்றியச் செயலர், எங்களது ஊருக்கு வந்து பிராக்குடி கண்மாயில் பணிகள் செய்வதை உடனே நிறுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் நீங்கள் பணி செய்தாலும், பணம் பெற முடியாது என மிரட்டுகிறார். மேலும், கண்மாய் பகுதியில் 2 மண் அள்ளும் இயந்திரங்களையம் நிறுத்திவிட்டார். இதனால், குடிமராமத்துப் பணியை மேற்கொள்ள முடியாமல் உள்ளோம் என்றார்.
      அச் சங்கத்தின் தலைவர் நச்சாடலிங்கம் கூறியது: அதிமுக ஒன்றியச் செயலருக்கு ஆதரவாக, சேத்தூர் காவல் நிலைய ஆய்வாளரும் குடிமராமத்துப் பணியை நிறுத்துமாறு மிரட்டினார். எனவே, பணியை நிறுத்திவிட்டோம். 
      இது குறித்து தமிழக முதல்வரின் தனிப் பிரிவு, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர், முதன்மைப் பொறியாளர் ஆகியோருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளோம் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT