விருதுநகர்

"மத்திய அரசு வழங்கிய ரூ.6,000 கோடியை தமிழக அரசு திருப்பி அனுப்பியுள்ளது'

29th Jul 2019 09:01 AM

ADVERTISEMENT

தமிழக அரசுக்கு பல்வேறு திட்டப் பணிகளுக்காக வழங்கப்பட்ட நிதியில், ரூ.6000 கோடியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக  மத்திய தணிக்கைக் குழு அறிக்கையில் கூறியிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி தெரிவித்தார்.
விருதுநகர், விஎம்சி காலனி பகுதியில் தேசிய வரைவு கல்வி கொள்கைக்கு எதிராக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை உ.வாசுகி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார். 
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
இரண்டாம் முறையாக பிரதமர் பதவி ஏற்ற மோடி, ஏழை எளிய மக்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், கருத்து சுதந்திரங்களை பேசுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தற்போது பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் யாரை வேண்டுமானாலும் கைது செய்து 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கலாம். 
மாற்றுக் கருத்து கூறுபவர்களை ஒடுக்குவதற்காக தான் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 
பாஜக வினர், சிறுபான்மையின மக்கள் மற்றும் பெண்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
மாநில தகவல் ஆணையர் ஐந்து ஆண்டுகள் பதவி வகிக்கலாம். இவர்களது பதவி காலத்தை மத்திய அரசு நீக்கியுள்ளது. மேலும், இவர்களுக்கான சம்பளத்தை மத்திய அரசே தீர்மானிக்கும் எனவும் அறிவித்துள்ளது. இதன் மூலம் தகவல் ஆணையர்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. மேலும், மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம் தொழிலாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை வாட்டி வதைக்கும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் தேசிய வரைவு கல்விக் கொள்கை குறித்து ரகசியமாக கூட்டங்கள் நடத்துகின்றனர்.
கல்வி கொள்கை குறித்து 484 பக்கங்களில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சுருக்கமாக கருத்து வெளியிட்டுள்ளனர். இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலாக உள்ளது. இதுகுறித்து இரண்டு மாதத்திற்குள் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம் என மிகக் குறைந்தளவு கால அவகாசம் வழங்கியுள்ளனர். 
அதேபோல், புதிய கல்வி கொள்கையில் 3, 5, 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேண்டும். பிளஸ் 2 படிப்பு முடித்து கலை கல்லூரிக்கு செல்ல வேண்டுமானால் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என கல்வி முழுவதும் லாபம் தர கூடிய தொழிலாக மாற்றப்பட்டுள்ளது. 
மத்திய அரசின் கைப்பாவையாக மாநில அரசு செயல்பட்டு வருகிறது. கடந்தாண்டு தமிழகத்திற்கு நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு வழங்கப்பட்ட நிதியில் தற்போது ஆயிரம் கோடி ரூபாய் குறைவாக மத்திய அரசு வழங்கியுள்ளது. இதனால், இத்திட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற பலருக்கு வேலை வாய்ப்பு பறி போய் விட்டது. 
மேலும் பல்வேறு திட்டங்களுக்கு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்ட நிதி ரூ. 6,000 கோடியை தமிழக அரசு திருப்பி அனுப்பி உள்ளதாக மத்திய தணிக்கை குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுக் கூட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்து வருகின்றனர். அறிவிக்கப்படாத அவசர நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என்றார். அப்போது, மாவட்டச் செயலர் அர்ச்சுணன் உடனிருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT