விருதுநகர்

பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது: காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

29th Jul 2019 09:01 AM

ADVERTISEMENT

பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காப்பீட்டு கழக ஊழியர் சங்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
விருதுநகர் கட்டையாபுரம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் பேரணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இப்பேரணியை எஸ்ஐசி விருதுநகர் கிளையின் மூத்த முகவர் வைரவசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி, காமராஜர் புறவழிச்சாலை, அல்லம்பட்டி சந்திப்பு சாலை, ராமமூர்த்தி சாலை வழியாக சென்று நிறைவடைந்தது. 
அதன் பின்னர் நடைபெற்ற மாநாட்டில், மத்திய அரசு, லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது. பொதுக் காப்பீடு நிறுவனப் பங்குகளை விற்கக் கூடாது. காப்பீடு பிரீமியத்திற்கு மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
முன்னதாக இந்த மாநாட்டிற்கு  ஐ.சி.பி.யு. தலைவர் ஜி.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார்.  மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ச.வெங்கடேசன், மதுரைக் கோட்ட எல்.ஐ.சி.சி.எல்-1 சங்க பொதுச் செயலாளர் பாண்டியன், என்.எப்.ஐ.டபுள்யூ.ஐ. பொதுச் செயலாளர் ஜோசப் சுரேஷ் ராஜ்குமார், எல்.ஐ.ஏ.எப்.ஐ. தலைவர் முத்துமாணிக்கம், ஐ.சி.இ.யு நெல்லை பொதுச் செயலாளர் சி.முத்துகுமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். மேலும், ஏ.ஐ.ஐ.இ.ஏ. தலைவர் அமானுல்லாகான் சிறப்புரையாற்றினார். காப்பீட்டு கழக ஊழியர் சங்க கிளைச் செயலாளர் ராஜேஷ் வரவேற்றார். 
இதில், காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தை சேர்ந்தோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT