விருதுநகர்

கோபாலபுரத்தில்  "இ-சேவை' மையக் கட்டடம்  பயன்பாடின்றி உள்ளதால் பொதுமக்கள் அவதி

29th Jul 2019 09:02 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் கோபாலபுரம் கிராமத்தில் கடந்த  4 ஆண்டுகளாக  கிராம "இ-சேவை' மையக் கட்டடம் பயன்பாடின்றி உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோபாலபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கடந்த 2015-16 ஆம் நிதியாண்டில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் "இ-சேவை' மையம் கட்டப்பட்டது. ஆனால் அதற்கான மின் இணைப்பு வழங்குதல், ஊழியர்களை நியமித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தொய்வு ஏற்பட்டதால்,  இந்த மையம் பயன்பாட்டிற்கு வராமலே உள்ளது. 
இந்நிலையில் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் "இ-சேவை' மையம் பயன்பாட்டிற்கு வராததால், இக்கிராம மக்கள் ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்று , பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கும், விவசாயிகள் பயிர்க்காப்பீடு தொகை கட்டுவதற்கு எனப் பல்வேறு தேவைகளுக்கும் அருப்புக்கோட்டைக்குச் சென்று வர வேண்டியுள்ளது.
இக்கிராமத்திற்குப் பேருந்து வசதியும் குறைவு என்பதால், அருப்புக்கோட்டைக்குச் சென்று வர ஒரு நாள் முழுவதும் வீணாகி விடுவதாக  பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் 4 ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி "இ-சேவை' மையம் பூட்டியே இருப்பதால், அக்கட்டடம் பாழடைந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து "இ-சேவை' 
மையத்தை விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT