விருதுநகர்

மக்காச்சோளம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 22 கோடி நிவாரணம்: ஆட்சியர்

27th Jul 2019 07:27 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டத்தில், கடந்தாண்டு மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டது. எனவே, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.22 கோடி நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்தார்.
 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் அ.சிவஞானம் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ. உதயகுமார், வேளாண்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: பருவமழை பொய்த்ததால் குடிநீருக்கே சிரமப்பட்டு வருகிறோம். இந்நிலையில், சொட்டு நீர் பாசன கருவிகள் மூலம் விவசாயம் செய்ய வேளாண் துறை அலுவலர்கள் அறிவுறுத்துகின்றனர். அதில், சிறு குறு விவசாயிகளுக்கு முழு மானியம், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்குவதாக கூறுகின்றனர்.
 இந்த மானியத்தை பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். மேலும், சொட்டு நீர் பாசன கருவிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு அரசு சார்பில் நேரடியாக பணம் அனுப்பப்படுவதால், தரமற்ற கருவிகளை வழங்குகின்றனர். மேலும், விவசாயிகளிடம் கருவிகள் வழங்குவதற்கு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக கேட்கின்றனர். எனவே, சொட்டுநீர் கருவிகள் வாங்குவதற்கு அரசு வழங்கும் பணத்தை, விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும்.
 மேலும், விவசாயிகள் சம்பந்தப்பட்ட கருவிகளை வாங்குவதை அரசு அலுவலர்கள் கண்காணிக்கலாம். நரிக்குடி பகுதியில் நெல் நாற்றுக்கு பாய் நாற்றங்கால் முறையை ஏற்படுத்த வேளாண் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேத்தூர் பகுதியில் மணவாக்கி கண்மாய் வரத்து கால்வாய் செல்லும் வழியில் ஒரு கி.மீ. தொலைவுக்குள் 6 இடங்களில் 6 அடி உயரத்துக்கு தடுப்பணை கட்டியுள்ளனர். 
இதே நிலைதான் பிராவடி கண்மாயிலும் உள்ளது. சுமார் 500 மீட்டருக்கு அப்பால் தான் தடுப்பணை கட்ட வேண்டும். இதனால், கண்மாய்க்கு தண்ணீர் வர இயலாத நிலை உள்ளது. 
மேலும், இப்பகுதியை சேர்ந்த 10 கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லாமல் விவசாயம் முற்றிலும் அழிந்து விடும். வத்திராயிருப்பு அருகே உள்ள கொடிக்குளம், குன்னூர் கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அழகர் அணை திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இத்திட்டத்தை நிறைவேறினால் 5 மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவர்.
மேலும், பம்பன் அச்சன் கோயில் மேல்வைப்பாறு திட்டம் எந்த நிலையில் உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் தென்னைக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை வேளாண் அலுவலர்கள் செயல்படுத்த காலம் தாழ்த்துகின்றனர். 
மேலும், பல ஆயிரம் ஹெக்டேரில் தென்னை மரங்கள் உள்ளன. இதில் விளையக் கூடிய கொப்பரை தேங்காய்கள் 115 ஐ- ரூ.650 க்கு வியாபாரிகள் வாங்குகின்றனர். எனவே, கொப்பரை தேங்காய்க்கு அரசு சார்பில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். சிவகாசி, மீனாட்சிபுரம் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். 
மேலும், அப்பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள சாலையை அகற்ற வேண்டும். அதேபோல், அரசு அனுமதியின்றி குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர் என்றனர்.
அப்போது, ஆட்சியர் அ.சிவஞானம் கூறியதாவது: படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிவாரணத் தொகையாக ரூ. 22.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
எனவே, விவசாயிகள் தங்களது வங்கி கணக்கை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்க வேண்டும். 
மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டவர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,410-ம், இறவை பாசனத்தில் மக்காச்சோளம் பயிரிட்டவர்களுக்கு ரூ.13,500 நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது. சேத்தூர் கண்மாய் வரத்து கால்வாயில் கட்டப்பட்டுள்ள தடுணைகள் குறித்து அதிகாரிகள் நேரடியாக அய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மீனாட்சிபுரம் கண்மாய் ஆக்கிரமிப்பை சிவகாசி கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், அழகர் அணை திட்டம் ஆய்வு செய்யப்பட்டதில் செலவு அதிகம். அதனால் பயன் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT