விருதுநகர்

சிவகாசி நகராட்சி, மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படுமா?

27th Jul 2019 07:27 AM

ADVERTISEMENT

சிவகாசி நகராட்சி, மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சிவகாசி நகராட்சி 2013 ஆம் ஆண்டு முதல் சிறப்பு நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த நகராட்சியோடு, திருத்தங்கல் நகராட்சிமற்றும் சித்துராஜபுரம், விஸ்வநத்தம், நாரணாபுரம், பள்ளபட்டி, அனுப்பன்குளம், தேவர்குளம், ஆனையூர், செங்கமலநாட்சியார்புரம், சாமிநத்தம் ஆகிய 9 ஊராட்சிகளையும் இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சிவகாசியில் 23.10. 2017 அன்று சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் அறிவித்தார். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் கூறி வருகிறார்கள்.
உள்ளாட்சி அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருந்த போது, நகராட்சி நிர்வாகம் இந்த 9 ஊராட்சிகளையும் இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. மேலும் ஊராட்சி மன்றத்தலைவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால், அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யும். நகரின் உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அரசு இதுவரை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பை வெளியிடாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதுகுறித்து பாஜக முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஜி.ஆறுமுகச்சாமி கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழில் நகரங்களில் சிவகாசி முக்கியமானது. இங்கு இந்தியாவிருந்து பல மாநிலத்தவர்களும், வெளிநாட்டினரும் வர்த்தக ரீதியில் வந்து செல்கிறார்கள். அவர்கள் சிவகாசியை வந்து பார்த்துவிட்டு, மிகச்சிறிய கிராமம் போல உள்ளது எனக்கூறுகிறார்கள். நகரின் உள்கட்டமைப்பை செம்மைப்படுத்த முதல்வர் அறிவித்தபடி சிவகாசி நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி விரைவில் அறிவித்து, அதனை அரசிதழிலும் வெளியிட வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT