விருதுநகர்

இருக்கன்குடி உணவகங்களில் சுகாதாரமற்ற உணவு விற்பனை: பக்தர்கள் அவதி

22nd Jul 2019 08:29 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி உணவகங்களில் சுகாதாரமற்ற உணவுகளை விற்பதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில்,  300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அர்ச்சுனா நதியும், வைப்பாறும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது.
இக்கோயில் அருகே இருக்கன்குடி நீர்த்தேக்க அணையும்,  காசி விஸ்வநாதர் ஆலயமும் அமைந்துள்ளன. 
இந்த கோயிலுக்கு தேனி, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். மேலும்  செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். தற்போது ஆடி மாதம் என்பதால் பக்தர்களின் வருகை  அதிகரித்துள்ளது. 
இந்நிலையில் இப்பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோயிலைச் சுற்றிலும் சுமார் 400-க்கும் மேற்பட்ட  உணவகங்களும், தேநீர்  கடைகளும், பலகார கடைகளும் உள்ளன. இந்த உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்வதாகவும்,  காலாவதியான உணவுகளையும் விற்பனை செய்வதாகவும் பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
மேலும் குடிசைத் தொழில் தயாரிப்பு என்ற பெயரில் தரமற்ற குளிர்பானங்களும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் உணவுப் பொருள்களை மூடி வைக்காததால், ஈக்கள் மொய்க்கும் நிலையில் விற்பனை செய்யப்படுகின்றன. 
இதுதவிர உணவகங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடும் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து திருநெல்வேலியை சேர்ந்த பக்தர் பிச்சுமணி கூறியது: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 
இந்த கோயில் பகுதியில் உள்ள கடைகளில் சுகாதாரமற்ற நிலையில், கலாவதியான உணவுகள், அதிக விலையில் விற்பனை செய்யபட்டு வருகின்றன. 
கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுகாதாரமற்ற உணவை உண்பதால் உடல்நல பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT