ராஜபாளையம் அருகே உள்ள கல்குவாரியில் பாறைகளை வெட்டி எடுக்க வைக்கப்படும் வெடியால் அருகில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுவதால் அந்த குவாரியை மூட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அயன்கொல்லங்கொண்டான் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இந்தப் பகுதியில் மொட்டமலை, கல்லமலை, திருப்பனமலை என மூன்று மலைகள் உள்ளன. அரசு சார்பில் இந்த மலைகளில் பாறைகளை வெட்டி எடுப்பதற்காக தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த குவாரி அமைந்தபோது எழுந்த எதிர்ப்பு இன்றும் தொடர்கிறது. குவாரியில் அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு மேல் அதிக அளவில் பாறைகளை வெட்டி எடுக்கின்றனராம். மேலும் இதற்காக வெடி வைக்கப்படுவதால் பூமி அதிர்வு ஏற்பட்டு குவாரி அருகே உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறதாம். எனவே இந்த குவாரியை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.