ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொழிலதிபர் வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.75 ஆயிரம் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மடவார்வளாகம் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் குப்புசாமி (48). ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர், ஞாயிற்றுக்கிழமை காலை குடும்பத்துடன் வீட்டைப் பூட்டி விட்டு, சாத்தூரில் உள்ள உறவினர் இல்ல விழாவுக்குச் சென்றுவிட்டார்.
பின்னர், இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.75 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில், வன்னியம்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.
மேலும், தடயவியல் நிபுணர் கைரேகைகளை பதிவு செய்தனர். சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட காவல் மோப்ப நாய், வீட்டிலிருந்து சாலை வரை ஓடிச் சென்று நின்றது. போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.