விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் தேடப்பட்டு வந்த திருடர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 90 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அருப்புக்கோட்டையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தேர் திருவிழா நடைபெற்றதை முன்னிட்டு, தாலுகா காவல் துறையினர் காந்தி நகர் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவரை நிறுத்தி, போலீஸார் ஆவணங்களைக் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததுடன், திடீரென வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.
போலீஸார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர், காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களிடம், போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த பாலசங்கர் (37) மற்றும் அம்பாசமுத்திரம் அருகே பொட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற ராமையா (39) எனத் தெரியவந்தது.
இவர்கள் இருவரும், காரியாபட்டி, பந்தல்குடி, அருப்புக்கோட்டை, காந்தி நகர், ஏழாயிரம்பண்ணை, மாரனேரி, திருவிருந்தாள்புரம், கிருஷ்ணன்கோவில், மச்சக்காரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் வீட்டின் பூட்டை உடைத்து திருடுவது, பெண்களை வழிமறித்து சங்கிலியை பறிப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்ற போலீஸார், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 90 பவுன் நகைகளை கைப்பற்றினர். இது தொடர்பாக, அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து, பாலசங்கர், ரமேஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.