விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கோவிலூரில் ரூ. 68 லட்சம் மதிப்பில் கண்மாய் குடிமராமத்து பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
ராஜபாளையம் அருகே கோவிலூரில் முகவூர் கண்மாய் அமைந்துள்ளது. 72 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக் கண்மாயை நம்பி 294 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் முகவூர், தேவதானம், சேத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த 70 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் மற்றும் கரும்பு பயிரிட்டு வருகின்றனர்.
இந்த கண்மாய் கரை, கலிங்கல் உள்ளிட்டவைகள் பலமிழந்துள்ளதால், கண்மாயை குடிமராமத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதார துறை சார்பில் 9 கண்மாய்களை மறு சீரமைப்பு செய்ய ஆணை வெளியானது. 2 ஆம் கட்டமாக முகவூர் கண்மாயை ரூ. 68 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணி செய்யும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
மாவட்ட வழங்கல் அலுவலர் செல்வக்குமார், வட்டாட்சியர் ஆனந்தராஜ் ஆகியோர் பணிகளை தொடக்கி வைத்தனர். உடன் செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர் கலைச்செல்வி, உதவி பொறியாளர்கள் ஜான்சி மற்றும் புனித லட்சுமி உள்ளிட்ட வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் இருந்தனர்.