விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நத்தத்துபட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நத்தத்துபட்டி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதரவில்லை என இப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
ஊராட்சி நிர்வாகம் சார்பில் வாருகால், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்டவை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டு தற்போது முறையான பராமரிப்பு செய்யப்படவில்லை.
இதனால், கழிப்பறைகள் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளன. வாருகால் சேதமடைந்து தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
முறையான குடிநீர் விநியோகம் இல்லாத காரணத்தால் குடம் தண்ணீர் ரூ.12-க்கு விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது.
எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையான நடவடிக்கை எடுத்து இப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.