விருதுநகர்

அருப்புக்கோட்டை சொக்கநாத சுவாமி கோயிலில் ஆனித் தேரோட்ட விழா

15th Jul 2019 07:24 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி உடனுறை சொக்கநாதசுவாமி கோயில் ஆனித் தேரோட்டத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆனித் தேரோட்டத் திருவிழா மொத்தம் 13 நாள்கள் நடைபெறும். இதன்படி இந்த ஆண்டும் இக்கோயிலில் கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் இரவு காளை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன், சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
இதில், திருவிழாவின் 7 ஆம் நாளான கடந்த புதன்கிழமை அம்மன் தபசுக் காட்சியும், 10 ஆம் நாளான சனிக்கிழமை மீனாட்சி-சொக்கநாத சுவாமி திருக்கல்யாணமும் நடைபெற்றன.
தொடர்ந்து 11 ஆம் நாள் திருவிழாவாக ஞாயிற்றுக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது. அதில் அம்மனும், சுவாமியும் தம்பதி சமேதராக பெரியதேரில் பவனி வந்தனர். திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வீதியில் தேர் வலம் வந்தது. 
இந்நிலையில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தேரின் சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதால் கோயிலுக்கு அருகிலேயே தேர் நிறுத்தப்பட்டது. பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டு, சுமார் முக்கால் மணி நேரத்துக்குப் பிறகு தேர் மீண்டும் வீதிகளில் வலம் வரத் தொடங்கியது.  
தேரில் எழுந்தருளிய சுவாமியை பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை படைத்து பக்தர்கள் வழிபட்டனர். 
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களிலிருந்தும், பக்கத்து மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர். விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT