விருதுநகர்

மக்கள் தொகை கட்டுப்பாடு: விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை முதலிடம்: ஆட்சியர் தகவல்

12th Jul 2019 07:53 AM

ADVERTISEMENT

மக்கள் தொகை கட்டுபாட்டில் சிறப்பாக செயல்பட்டு மாநில அளவில் விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை முதலிடம் பெற்றிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்தார். 
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை ஆட்சியர் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் அரசு அலுவலர்கள், விருதுநகர் செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு, மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆட்சியர் அலுவலகம் வரை சென்றனர். 
அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற உலக மக்கள் தொகை -2019 குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் ஆட்சியர் பேசியது: 
மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவு, பாதிப்புகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். 2018-19 ஆம் ஆண்டில் மாநில அளவில் அரசு மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையில் குடும்ப நல அறுவைச் சிகிச்சை செய்து, விருதுநகர் மாவட்டம் இரண்டாமிடம் பெற்றுள்ளது. 
மேலும், கருத்தடைக்கு பயன்படுத்தக்கூடிய அந்தாரா என்ற ஊசி மருந்தை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்திய வகையில் விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. 
ஒரு குடும்பத்தில் எவ்வளவு தான் பொருளாதாரம் வளர்ந்திருந்தாலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தவறினால் முன்னேற்றம் காண்பது கடினம். எனவே தாய்சேய் நலத்தை மேம்படுத்தி பிறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும். குடும்பநல திட்டங்களை வட்டார மருத்துவ அலுவலர்கள், கிராமம் மற்றும் நகர்ப்புற செவிலியர்கள் பொது மக்களுக்கு விளக்க வேண்டும் என்றார். 
இக்கூட்டத்தில், ராம்கோ நிறுவனத்தின் சார்பில் கர்ப்பிணிகள் கருத்தரித்த நாள் முதல் பிரசவக் காலம் வரை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய தாய் சேய் நல விழிப்புணர்வு கையேட்டினை ஆட்சியர் வெளியிட்டார்.  குடும்ப நல அறுவைச் சிகிச்சைக்கு துணையாக பணியாற்றிய 22 கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஆட்சியர், நினைவுப்பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமார், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள்) மனோகரன், துணை இயக்குநர் (பொ) பாபுஜி (மருத்துவப்பணிகள்), மற்றும் செவிலியர் பயிற்சிப் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT