விருதுநகர்

விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

6th Jul 2019 07:41 AM

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை தண்ணீர் வீணாக வெளியேறியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
விருதுநகர் நகராட்சிப் பகுதியில் உள்ள 36 வார்டுகளில் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டம், ஆனைக்குட்டம் நீர்தேக்கம் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வறட்சி காரணமாக 10 நாள்களுக்கு ஒரு முறையே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 
ஏற்கெனவே போதிய மழை இல்லாததால், பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை கால நீர்தேக்கமான ஒண்டிப்புலி நீர்தேக்கத்திலிருந்து, விருதுநகர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து விருதுநகர் வரை வரக்கூடிய குடிநீர் குழாய்கள் பல இடங்களில் உடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சூலக்கரை, மாடர்ன் நகர் ஆகிய பகுதியில் குழாய் சேதமடைந்ததால் தண்ணீர்  வெளியேறியது. 
இந்நிலையில், விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே குழாய் சேதமடைந்ததால் வெள்ளிக்கிழமை பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக  வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இது குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், மாலை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். 
எனவே, ஒண்டிப்புலி நீர்தேக்கத்திலிருந்து வரக்கூடிய குழாய்களை ஆய்வு செய்து, சேதமடைந்திருந்தால் அவற்றை மாற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT