தனது இடத்தை மீட்டுத் தரக் கோரி விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்ணை போலீஸார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதால் அவர் மயக்கமடைந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டான்பட்டியைச் சேர்ந்தவர் சின்னராசு மனைவி காளியம்மாள் (39). துப்புரவு தொழிலாளியான இவருக்கு மகன் செந்தில்வேல் (18), மகள் யமுனாதேவி (13) ஆகியோர் உள்ளனர். இவர் வசிக்கும் பகுதியில் மூன்று சென்ட் இடம் வாங்கி பத்திர பதிவும் செய்துள்ளார். அதற்கான தீர்வையும் கட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவரது இடத்தின் அருகே வசிக்கும் பெண் ஒருவர், அந்த இடம் தனக்கு சொந்தமானது என காளியம்மாளை மிரட்டி வந்தாராம்.
இதுகுறித்து அவர், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், திங்கள்கிழமை புகார் மனு அளிக்க வந்த காளியம்மாள், ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட முயன்றார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவரை அங்கிருந்து அகற்ற முயன்றனர்.
அப்போது அவர் மயக்கமடைந்தார். இதையடுத்து காளியம்மாளை மயக்கம் தெளிய வைத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க போலீஸார் அனுமதியளித்தனர்.